Translate

Pages

Thursday, May 19, 2011

மெல்லத் தமிழ் இனிச் சாகும்!

ரஸியாவைச் சேர்ந்த தமிழ் பேராசிரியரை சன் ரீவியின் வணக்கம் தமிழகம் பேட்டிகண்டபோது பிறவியில் தமிழன் என்ற ரீதியில் வெட்கப்பட்டுக் கொண்டேன். சரளமாகத் தமிழ் பேசிய அவர் முன்னால் அந்த அறிவிப்பாளர் தமின்கிலிசில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். இந்த நிலைக்கு ஒட்டு மொத்த பழியையும் அந்த அறிவிப்பாளரின் மீது போட முடியாது.

தொல்காப்பியரின் பெருமை பேசும் தமிழ் மொழியிடம் ஒரு கௌரவச்சிக்கல் இருக்கிறது. பொதுவாக பிற மொழிச் சொற்களையும் ஒலிகளையும் உள்வாங்கப் பின்னிற்பது மாட்டுமல்லாமல் அவற்றின் மீது தனது இலக்கணப்புலமையைத் திணித்து திரிபுபடுத்திச் சின்னாபின்னாப்படுத்திப் பெருமைப்பட்டுக்கொள்வது. எந்தளவிற்கெனில் அந்தச் சொல்லில் இல்லாத எழுத்துக்களை அறிமுகப்படுத்துவது, ஊர்களின் பெயர்களை மொழி பெயர்ப்பது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கு பெயர் சூட்டி மகிழ்வது என இன்னொரன்ன சில்மிசங்கள்.

"லங்கா" என்ற எமது நாட்டின் பெயரை முதலில் 'ல்' வும் இறுதியில் 'கா' வும் வரமுடியாது எனக்கூறி "இலங்கை' ஆக மாற்றி துவம்சம் செய்தமை வரலாற்றில் என்றும் மறக்க முடியாது. இதுபோல, களுத்துறை, நீர்கொழும்பு, கொழும்பு, சிலாபம், காலி என பல உதாரணங்களைக் கூறலாம். பிரதியீடாக நாம் மடகளபுவ, ட்றிங்கோ, யாபனய எனப் பறிகொடுக்கவும் நேர்ந்தது.

நாம் ஒரு முஸ்லீம் என்ற வகையில் இந்தச் சிக்கலால் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். இசுலாம், இறசூல், மசீது, என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். இருந்தாலும் தற்காலத்திலோரளவு சுதாகரித்துள்ளமையும் காணலாம். இஸ்லாம் எனவும், றஸூல் எனவும் எழுத முடிந்துள்ளது.

மின்னழுத்தி, துவிச்சக்கரவண்டி, பேரூந்து, விண்கலம் போன்ற காரணப் பெயர்களை அகராதியில் சேர்த்து அவனவன் மூளையைப்பாவித்து கண்டுபிடிக்க நாமோ நமது வறட்டுகௌரவத்தைப் பாவித்து பெயர் சூட்டிக் கொண்டிருந்தோம்.

விளைவு ஊரோடு ஒத்தோட முடியாமல் சிக்கித்தவித்து எம்மாவர்களுக்கே அறிமுகமில்லாத மொழியாக்கப்பட்டு அன்னியப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது நம் செம் மொழி.

அவன் தனது மொழிக்கு 'இங்லிஷ்' என பெயர் வைத்திருக்க எமது பெருமை அவனுக்கு 'ஆங்கிலம்' எனச் சூட்டி மகிழ்ந்தது. விளைவு, தமிழ் பேசிய எம்மவர்கள், 'தமிங்கிலம்' பேசத்தொடங்கினார்கள், பின்னர் 'தமிங்கிலிஷ்' ஆக மாறி அந்த ஒரே அடயாளமாகிய 'த' வையும் தவறவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்