Translate

Pages

Wednesday, December 20, 2017

ஆட்டி அடங்கும் தேர்தலடா

No automatic alt text available.


ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
முடிந்தால் கொழும்பிலே செட்டிலடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா

பிரிந்தோம் உறவினை உண்மையடா
பேசினோம் வன்சொல்லை நட்பிற்கடா
மறவோம் என்பதே நித்தியமடா
மறந்தான் நம்மளை தலைவனடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா

சிரித்தே உண்மையை மறைக்கின்றான்
தீமைகள் செய்தே பிழைக்கின்றான்
இருப்பார் என்றே நினைப்பவர் கனவுகளில்
மறந்தே கண்களில் தூவுகின்றார்
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா

சொல்லுவார் அதுபோல் சிறப்பில்லை
சொன்னதை செய்தார் யாருமில்லை
எண்ணுவார் வாக்கினை முடிந்ததுமே
எண்ணிடார் எம்மினை கனவிலுமே
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா

சிரிப்பவன் கபடத்தை மறைக்கின்றான்
தீமைகள் செய்தே பிழைக்கின்றான்
இருப்பார் என்றே நினைப்பவர் கனவுகளில்
மறந்தே கண்களில் தூவுகின்றார்
ஆட்டி அடங்கும் தேர்தலடா
அடிதடி விளைவே சொந்தமடா
ஆட்டி அடங்கும் தேர்தலடா

வோட்டுக்கேட்டுப்பார்

வோட்டுக்கேட்டுப்பார்
உன்னைச்சுற்றி
களிசறைகள் வட்டம் போடும்
ராப்பிச்சையின் கோலம்
உன்னில்தோன்றும்
உனக்கும் கல்லெறி வரும்
தலையெழுத்து இழிவாகும்
வாக்காளன் தெய்வமாவான்
உன்பிம்பம் விழுந்தே
சுவர்கள் சேதமாகும்
ரோச நரம்பு மரித்துபோகும்
வோட்டுக்கேட்டுப்பார்
தலையணையை மறப்பாய்
மூன்றுமுறையும்
கும்பிடு போடுவாய்
வாக்கிருந்தால்
துஷ்டனும் நண்பனாவான்
வென்றுவிட்டால்
நண்பனும் யாரோ ஆவான்
உறவினர் கூட உன்னை
ஒதுங்கி நிற்பர்
ஆனால் ஊரே
உன்னோடாய் உணர்வாய்
சோற்றுக்கும் நோட்டுக்கும்
நாதியில்லா
கூட்டாமொன்று
சூழக்காண்பாய்
இந்த ஏழை இந்த செல்வன்
இந்த உற்றார் இந்த உறவினர்
எல்லாம் தேர்தலில் வாக்களிக்கும்
எந்திரங்கள் என்பாய்
வோட்டுக்கேட்டுப்பார்
இருப்புகள் அடிக்கடி
இடமாறி ஆதரிக்கும்
நீபாரா அலைவரிசைகளிலும்
உன்குரல்
ஒலிபரப்பாகும்
உன் நரம்பு நாணமின்றி
நக்குவாரத்தில் அலையும்
கௌரவத்தின் திரைச்சீலையை
கையேந்தல் கலைக்கும்
ஹார்மோன்கள்
வற்றிய குளமாய்
வாக்குகள் மட்டும்
வேண்டி அலையும்
தாக்கங்கள்
சரமாரியாகும்
வோட்டுக்கேட்டுப்பார்
வாக்குக்கு மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?
அடாவடியில் இன்பம்
அடைந்ததுண்டா?
கழுவுவதின் சுகம்
அறிந்ததுண்டா?
உன்னையே உன்னால்
புகழத் தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?
வோட்டுக்கேட்டுப்பார்
சின்ன சின்ன புகழ்ச்சிகளில்
சிலிர்க்க முடியுமே
அதற்காகவேனும்
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காகவேனும்
வோட்டுக்கேட்டுப்பார்

No automatic alt text available.

Wednesday, November 29, 2017

தடமாற்றம்


முள்ளை முள்ளால் எடுக்கலாம் -குத்திய
முள்ளாலிலுமா?
கிள்ளியவனிடமே தொட்டிலாட்டலா?
கள்வனிடம் காவல் பொறுப்பா?
பிய்க்க முனைந்தவனிடமே
பிரிக்கவா கேட்கிறீர்கள்?
குரங்கு பிச்சித்தான் தின்னும்
பிரித்துத்தராது
புரிந்து கொள்ளுங்கள்!
நனையட்டும் ஆடு காய்ந்துவிடும்
நரியிடம் வேண்டாம் குடைவாசம்!
தடுமாற்றம் தவிர்த்திட
தடமாற்றிடலாகாது!

வாழ்வியல் கோலம்

 Image result for birth and marriage


மற்றவர் பெற்றார்
பெற்றவர் இழந்தார்
பெத்ததும் பெற்றார்
மற்றவர் பெற்றிட
பெற்றாராய் இழந்தார்
தொற்றிய தொற்றாய்
தொடர்ந்திடும் விதியிது
முற்றுப்பெறாத முடிவிலி உலக
முற்றுநாள் பெற்றிடும் வரையிலும்!

Thursday, August 17, 2017

தோஷதேசம்



கிழிக்க நினைத்ததோ தென்கிழக்கை
கிழிந்து போனதோ கீலம் கீலம்!

அத்துறைக்கப்பலொரு அரக்கனினாட்சி
சதுறயிலுமொரு சிற்றரசாட்சி
கல்துறையிலோ பாவம் தூங்குமாட்சி!

முகவெற்றிலையென முழங்கியவூரின்
அகத்தினிலிலோ  பிளவுகளாயிரம்!

துருவத்திசைகளின் மருதூரார்கள்,
பிரிவினை வேண்டி பிரயத்தனிக்கிரார்கள்!

வோட்டுக்காய் செய்யும் வெளிவேசம்
வேண்டாமே இந்த வேற்றுமை கோஷம்!

Tuesday, July 11, 2017

Quo Vadis Sri Lanka Cricket?

கங்காருக்கூட்டங்க 
கடித்துக்குதறுதுகா!

கறுப்புக்கானானுகளும் 
கோலிக்கூட்டமும்
கொத்தி விரட்டுதுகா!

வங்காளப்புலிகளும் 
சிங்கத்துக்கு மேலயாங்கா!

வெல்லாத இன்டீஸும் 
வெண்டிட்டு போகுதுகா!

சவுத்து ஆபிரிக்காவும்
சவுத்த ஆபிக்காவும் 
சாத்திட்டுபோகுதுகா!

ஆப்பு வெக்கிறத்துக்கு
ஆப்புகானித்தானும் காத்துக்கிடக்குதாங்கா!

போலபோடச்சொன்னா 
நூலக்கட்டிறங்கா!

பல்லுமாளிகையில மாநாயக்காக்களிடம்
மல்லுக்கட்டிறங்கா!

சிங்கக்கூட்டமிங்கு 
அசிங்கமா சிணுங்குதுகா!

http://www.espncricinfo.com/sri-lanka-v-zimbabwe-2017/engine/match/1104482.html

Tuesday, May 9, 2017

பொம்மலாட்டம்



ஆடத்தெரிந்தவர் நீங்கள்
ஆட்டுவிக்கிறார்கள், அசிங்கம்.
பொம்மலாட்டக்காரன்
புட்டுவத்தில் மோகம்,
பொம்மைகளாய் நீங்கள் மதியிழந்து
பட்டுமாய்கிரீர்கள் பாவம்.
நூலாய் உங்கள் சங்கம்
கீழாய் நீங்கள் தொங்கம்,
பாழாய் போனது பாவம்
மேலாய் நின்ற மதிப்பு.
மூடிய கதவுக்குள்
முடிக்கப்படும் முடிவுகள்,
தேடிய கௌரவம்
தெருவோடு போகுது.
மேதைகளாய் மேம்பட்டிருந்தீர்
மமதைகளாய் கீழ்பட்டுப்போனீர்,
மரியாதைக்குரியவர் நீங்கள்
மானமிழந்து குனிகிரீர்கள்.
வழிவந்த வரப்பிரசாதம்
வழிபடும் மக்களிருக்க,
பிழிந்தெடுக்கும் பிரயத்தனம்
இழியசெயல் ஆகியதுவே.

Monday, March 27, 2017

வரலாற்றில் ஒரு பாடம்





அன்று 1990 இன் ஜூன் அல்லது ஜூலை மாதம், அப்போதைக்கு பழகிப்போன விமான குண்டு வீச்சு, 21 செக்கன்களில் தொடங்கி முடியும் ஆட்டிலறியின் இரட்டை சத்தம் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளின் சத்தம் போன்று அல்லாமல் முன்பு கேட்டிராத ஒருவித புது வெடிச்சத்தங்கள் அதிகாலையிலிருந்தே கேட்கத்தொடங்கிருந்தன. "இரவுகளில் நடந்தேறிய சம்பவங்களின் அப்டேட்களை சுபஹு தொழுகையின் பின் அறிந்து கொள்ளாக்கூடியதாயிருக்கும்" என்ற வழமையினடிப்படையில், கடலிலிருந்து நேவி தாக்கத்தொடங்கியிருந்ததாக  அறிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது.

சில நாட்களுக்கு முன்புவரை ஹெலிக்கொப்டர்களே வான் தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும், ஒரு நாள் பட்டப்பகலிலேயே அப்பழுக்காக தெரியக்கூடியதாகவிருந்த, கீழிருந்து சீறிப்பாய்ந்த நெருப்புப்பந்துகளின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக திடீரென உயர உயர எழுந்த ஹெலி, மீண்டும் வரவேயில்லை. அதன் பிற்பாடு கரத்தை வடிவிலான சிறிய ரக விமானங்களும் சாதாரண விமாங்களின் வடிவையொத்த ஓரளவு பெரிய விமானங்களுமே வான் தாகுதல்களை நடாத்திக்கொண்டிருந்தன.

அன்று பொழுது புலரத்தொடங்கியிருந்தது, வழமைக்கு மாறான நேவியின் சத்தங்களுடன் வான் கரத்தைகளின் நடமாட்டங்களும் அதிகரித்திருந்தது. சாதாரணமாக குண்டுகளையே வீசும் வான் கரத்தைகள் இன்று நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு என புகைகளை வீசிக்கொண்டிருந்தன. நாடகம் உச்சக்கட்டத்தை அடைந்து முடிந்திருந்தது. சில நாட்களாய் ஒலித்த சத்தங்களெல்லாம் இந்த வழமைக்கு மாறான சம்பவங்களுடன் அமைதியாகிவிருந்தன.

இந்திய அமைதி காக்கும் படை திருப்பி அனுப்பப்பட்டிருந்த காலமது.  பிரேமதாச அரசுடன் புலிகள் பேச்சுக்களில் ஈடிபட்டுக்கொண்டிருந்தனர். அன்று 1990.06.11; கல்முனை உவெஸ்லி கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டியின் இரண்டாவது நிகழ்விற்காக முஸ்தபா சேர் ஒன் யுவர் மார்க், கெட் செட், ரெடி என தயாராக நிற்க, எல்லோரும் அந்த "டப்" சத்தத்தினை எதிர்பார்த்திருக்க, அதற்கு பதிலாக பட பட வென வேறு தொடர் வெடிசத்தம் தொடங்கியது. ஆம் கல்முனை நகருக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த இராணுவ வாகனம் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் யுத்தம் மீண்டும் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து பல பொலீஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுகின்றன, விடுவிக்கப்படுவார்கள் என்ற கருணாவின் வாக்குறுதியுடன் பிரேமதாச பொலீஸ் நிலையங்களை சரணடைய உத்தரவிடுகிறார். நிலமை தலைகீழ் ஆகிறது. சம்மாந்துறை தவிர ஏனைய பொலீஸ் நிலையங்களைச்சேர்ந்த சரணடைந்த அறுநூற்றுகுமேற்பட்ட பொலீசார் வரிசையில் நிறுத்தப்பட்டு கொல்லப்பட்ட அந்த வீர(?) வரலாற்று  சம்பவம் நடந்தேறுகிறது.( https://en.wikipedia.org/wiki/1990_massacre_of_Sri_Lankan_Police_officers )

இதே வீரர்கள்(?) தான் இந்திய படையுடன் ஒட்டியிருந்த இவர்களின் போட்டி வீரர்களால்(?) சுமார் ஒருவருடத்திற்கு முன் இதே போன்று காரைதீவு பொலீஸார் கொல்லப்பட்ட போது கொக்கரித்தவர்கள் என்பதினையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இதனைத்தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் யாவும் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், கல்முனையின் வாடிவீட்டுத்தொகுதியில் கடற்கரையோடு அமைந்திருந்த இராணுவ முகமானது புலிகளால் வீழ்த்தப்படமுடியாமலேயே இருந்தது. இத்தனைக்கும், பொசோன் விடுமுறைக்காக பெருமளவிலான இராணூவத்தினர் வீடுகளுக்குச்சென்றிருந்த நிலையில் சுமார் இருபத்தைந்திற்கும் குறைவானோரே முகாமுக்குள் இருந்திருந்திருந்தனர். ஆட்டிலறி மற்றும் வான் தாக்குதல்களின் உதவியுடன் சுமார் இருவாரங்களுக்கு மேலாக எதுவித சேதங்களுமின்றி தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தனர். எதுவித விநியோக மார்க்கங்களையோ நிரந்தர முகாங்களையோ கொண்டிராத  கல்முனை பிரதேசத்தில் நிலைத்து நின்று பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என்பதினை புலிகள் நிரூபித்திருந்தனர். இவ்வறான சூழ்நிலையில் பொலீஸ் நிலையங்களை சரணடையச்செய்ததானது இன்றும் விமர்சனத்திற்குரியதாவே பார்க்கப்படுகின்றது.


பறக்கத்துடிக்கும் கூட்டுப்புழுவைப்போல சிறுவன் என்ற சிறைக்குள் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டு சிறகடிக்க முனைந்து கொண்டிருந்தகாலம். காய்ச்சலுக்கு ஒற்றை  பெனடோலையே கொடுத்தமைக்கு எனது தந்தை டாக்கரிடம் திட்டு வாங்கிய போது, நான் வளர்ந்து விட்டதாக பெருமை பட்டுக்கொண்ட வயசு. சும்மாயிருக்க விடுமா தகவலறியும் தாகம்? நண்பர்களோடு தமிழ்வட்டையின் எல்லையை நோக்கி கால்கள் நகர்ந்தன. தமிழ்பெரியவர் இருவரின் சம்பாஷணை எமது தகவலறியும் தாகத்திற்கு தீனியானது.

"ஆமிக்காரன் கடலுக்குள்ளால ஓடிப்போயிட்டானாம்."

கோழகள் கீழைகள் என பலவாறான நக்கலான விமர்சனங்கள் வேறு. தமிழீழம் கிடைத்துவிட்டதைப்போன்ற பூரிப்பு அவர்களின் முகங்களில் அப்பட்டாய் தெரிந்தது. "பெடியன்கள் விடான்கள்" இதை நேரடியாக ஒருவர் கூறுவதினை அனுபவித்த சந்தர்ப்பம்.

இத்தனைக்கும் இந்த சமபவத்தினை தொடர்ந்து நடைபெறப்போகும் விளைவுகளைப்பற்றி ஊகிக்கத்தெரியாத அப்பாவிகளாக அந்த பெரியவர்கள் காணப்பட்டனர்.

இச்சம்பவம் நிகழ்ந்து சில நாட்களுக்குள்ளேயே அந்த அறுநூறு பொலீசாரின் அசிங்க படுகொலை குறித்து வெறியூட்டப்பட்ட நிலையில் இராணுவம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி எந்த வித பாரிய தாக்குதல்களுமின்றி இலகுவாக முன்னேறியது. ஜே வீ பீ கலவரத்தின் போது தன் இனத்தவரையே ஈவிரக்கமின்றி கொலை செய்ய பழக்கப்பட்டிருந்த இராணுவத்தின் வெறித்தனங்கள் இரண்டாம் கறுப்பு ஜூலை ஒன்றை அரங்கேறியிருந்தன. அகதிகளான எஜமானர்களால் கைவிடப்பட்ட நாய்களுக்கு மனிதப்பிணங்கள் விருந்தாயின.

இச்சம்பவங்கள் டயஸ்போராவின் வளர்ச்சிக்கு மென்மேலும் உரமூட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.  உலக நாடுகளின் காலூன்றியிருக்கும் டயஸ்போராக்கள் தங்களின் இருப்பிற்கு மெம்மேலும் மெருகூட்டுவதற்கு இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதா என ஏங்குவதினை அணமைக்கால சம்பவங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.