Translate

Pages

Monday, March 27, 2017

வரலாற்றில் ஒரு பாடம்





அன்று 1990 இன் ஜூன் அல்லது ஜூலை மாதம், அப்போதைக்கு பழகிப்போன விமான குண்டு வீச்சு, 21 செக்கன்களில் தொடங்கி முடியும் ஆட்டிலறியின் இரட்டை சத்தம் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளின் சத்தம் போன்று அல்லாமல் முன்பு கேட்டிராத ஒருவித புது வெடிச்சத்தங்கள் அதிகாலையிலிருந்தே கேட்கத்தொடங்கிருந்தன. "இரவுகளில் நடந்தேறிய சம்பவங்களின் அப்டேட்களை சுபஹு தொழுகையின் பின் அறிந்து கொள்ளாக்கூடியதாயிருக்கும்" என்ற வழமையினடிப்படையில், கடலிலிருந்து நேவி தாக்கத்தொடங்கியிருந்ததாக  அறிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது.

சில நாட்களுக்கு முன்புவரை ஹெலிக்கொப்டர்களே வான் தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும், ஒரு நாள் பட்டப்பகலிலேயே அப்பழுக்காக தெரியக்கூடியதாகவிருந்த, கீழிருந்து சீறிப்பாய்ந்த நெருப்புப்பந்துகளின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக திடீரென உயர உயர எழுந்த ஹெலி, மீண்டும் வரவேயில்லை. அதன் பிற்பாடு கரத்தை வடிவிலான சிறிய ரக விமானங்களும் சாதாரண விமாங்களின் வடிவையொத்த ஓரளவு பெரிய விமானங்களுமே வான் தாகுதல்களை நடாத்திக்கொண்டிருந்தன.

அன்று பொழுது புலரத்தொடங்கியிருந்தது, வழமைக்கு மாறான நேவியின் சத்தங்களுடன் வான் கரத்தைகளின் நடமாட்டங்களும் அதிகரித்திருந்தது. சாதாரணமாக குண்டுகளையே வீசும் வான் கரத்தைகள் இன்று நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு என புகைகளை வீசிக்கொண்டிருந்தன. நாடகம் உச்சக்கட்டத்தை அடைந்து முடிந்திருந்தது. சில நாட்களாய் ஒலித்த சத்தங்களெல்லாம் இந்த வழமைக்கு மாறான சம்பவங்களுடன் அமைதியாகிவிருந்தன.

இந்திய அமைதி காக்கும் படை திருப்பி அனுப்பப்பட்டிருந்த காலமது.  பிரேமதாச அரசுடன் புலிகள் பேச்சுக்களில் ஈடிபட்டுக்கொண்டிருந்தனர். அன்று 1990.06.11; கல்முனை உவெஸ்லி கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டியின் இரண்டாவது நிகழ்விற்காக முஸ்தபா சேர் ஒன் யுவர் மார்க், கெட் செட், ரெடி என தயாராக நிற்க, எல்லோரும் அந்த "டப்" சத்தத்தினை எதிர்பார்த்திருக்க, அதற்கு பதிலாக பட பட வென வேறு தொடர் வெடிசத்தம் தொடங்கியது. ஆம் கல்முனை நகருக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த இராணுவ வாகனம் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் யுத்தம் மீண்டும் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து பல பொலீஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுகின்றன, விடுவிக்கப்படுவார்கள் என்ற கருணாவின் வாக்குறுதியுடன் பிரேமதாச பொலீஸ் நிலையங்களை சரணடைய உத்தரவிடுகிறார். நிலமை தலைகீழ் ஆகிறது. சம்மாந்துறை தவிர ஏனைய பொலீஸ் நிலையங்களைச்சேர்ந்த சரணடைந்த அறுநூற்றுகுமேற்பட்ட பொலீசார் வரிசையில் நிறுத்தப்பட்டு கொல்லப்பட்ட அந்த வீர(?) வரலாற்று  சம்பவம் நடந்தேறுகிறது.( https://en.wikipedia.org/wiki/1990_massacre_of_Sri_Lankan_Police_officers )

இதே வீரர்கள்(?) தான் இந்திய படையுடன் ஒட்டியிருந்த இவர்களின் போட்டி வீரர்களால்(?) சுமார் ஒருவருடத்திற்கு முன் இதே போன்று காரைதீவு பொலீஸார் கொல்லப்பட்ட போது கொக்கரித்தவர்கள் என்பதினையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இதனைத்தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் யாவும் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், கல்முனையின் வாடிவீட்டுத்தொகுதியில் கடற்கரையோடு அமைந்திருந்த இராணுவ முகமானது புலிகளால் வீழ்த்தப்படமுடியாமலேயே இருந்தது. இத்தனைக்கும், பொசோன் விடுமுறைக்காக பெருமளவிலான இராணூவத்தினர் வீடுகளுக்குச்சென்றிருந்த நிலையில் சுமார் இருபத்தைந்திற்கும் குறைவானோரே முகாமுக்குள் இருந்திருந்திருந்தனர். ஆட்டிலறி மற்றும் வான் தாக்குதல்களின் உதவியுடன் சுமார் இருவாரங்களுக்கு மேலாக எதுவித சேதங்களுமின்றி தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தனர். எதுவித விநியோக மார்க்கங்களையோ நிரந்தர முகாங்களையோ கொண்டிராத  கல்முனை பிரதேசத்தில் நிலைத்து நின்று பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என்பதினை புலிகள் நிரூபித்திருந்தனர். இவ்வறான சூழ்நிலையில் பொலீஸ் நிலையங்களை சரணடையச்செய்ததானது இன்றும் விமர்சனத்திற்குரியதாவே பார்க்கப்படுகின்றது.


பறக்கத்துடிக்கும் கூட்டுப்புழுவைப்போல சிறுவன் என்ற சிறைக்குள் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டு சிறகடிக்க முனைந்து கொண்டிருந்தகாலம். காய்ச்சலுக்கு ஒற்றை  பெனடோலையே கொடுத்தமைக்கு எனது தந்தை டாக்கரிடம் திட்டு வாங்கிய போது, நான் வளர்ந்து விட்டதாக பெருமை பட்டுக்கொண்ட வயசு. சும்மாயிருக்க விடுமா தகவலறியும் தாகம்? நண்பர்களோடு தமிழ்வட்டையின் எல்லையை நோக்கி கால்கள் நகர்ந்தன. தமிழ்பெரியவர் இருவரின் சம்பாஷணை எமது தகவலறியும் தாகத்திற்கு தீனியானது.

"ஆமிக்காரன் கடலுக்குள்ளால ஓடிப்போயிட்டானாம்."

கோழகள் கீழைகள் என பலவாறான நக்கலான விமர்சனங்கள் வேறு. தமிழீழம் கிடைத்துவிட்டதைப்போன்ற பூரிப்பு அவர்களின் முகங்களில் அப்பட்டாய் தெரிந்தது. "பெடியன்கள் விடான்கள்" இதை நேரடியாக ஒருவர் கூறுவதினை அனுபவித்த சந்தர்ப்பம்.

இத்தனைக்கும் இந்த சமபவத்தினை தொடர்ந்து நடைபெறப்போகும் விளைவுகளைப்பற்றி ஊகிக்கத்தெரியாத அப்பாவிகளாக அந்த பெரியவர்கள் காணப்பட்டனர்.

இச்சம்பவம் நிகழ்ந்து சில நாட்களுக்குள்ளேயே அந்த அறுநூறு பொலீசாரின் அசிங்க படுகொலை குறித்து வெறியூட்டப்பட்ட நிலையில் இராணுவம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி எந்த வித பாரிய தாக்குதல்களுமின்றி இலகுவாக முன்னேறியது. ஜே வீ பீ கலவரத்தின் போது தன் இனத்தவரையே ஈவிரக்கமின்றி கொலை செய்ய பழக்கப்பட்டிருந்த இராணுவத்தின் வெறித்தனங்கள் இரண்டாம் கறுப்பு ஜூலை ஒன்றை அரங்கேறியிருந்தன. அகதிகளான எஜமானர்களால் கைவிடப்பட்ட நாய்களுக்கு மனிதப்பிணங்கள் விருந்தாயின.

இச்சம்பவங்கள் டயஸ்போராவின் வளர்ச்சிக்கு மென்மேலும் உரமூட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.  உலக நாடுகளின் காலூன்றியிருக்கும் டயஸ்போராக்கள் தங்களின் இருப்பிற்கு மெம்மேலும் மெருகூட்டுவதற்கு இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதா என ஏங்குவதினை அணமைக்கால சம்பவங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.