Translate

Pages

Wednesday, November 23, 2022

மிஃராஜ்





1. அஞ்ஞான இருள் கொண்ட 
     அராபிய தேசம்கண்ட 
 விஞ்ஞானமும் வியந்த 
     விண்பயண கதை கேளீர் 
                     **** 
 2. ஈன்ற பிள்ளை பெண்ணாயின் 
    ஈற்றினிலே கொன்றொழித்த தேசம் 
ஈமான் வழியில் ஈருலகம் வென்றிட 
    கோமான் நபி வந்துதித்த காலம்
                    ****
3. போதனைகள் பல செய்தும் 
    பாதகர்கள் கல் நெஞ்சம் 
வேதனைகளுக்கேது பஞ்சம் 
    வேதம் கொணர்ந்த கோமானுக்கு
                **** 
4.  துயரங்கள் துரத்தி வர 
    தூரத்தே நல்லொளி மிளிர 
அயராத உழைப்பினிலே 
    அண்ணலார் திளைத்திருக்க 
                **** 
5. வல்லவன் அல்லாஹ் தன் 
    வல்லமை உணர்த்திக்காட்ட 
நல்லவர் நபிகளாரை 
    நாடினான் விண்பயணத்திற்கு 
                **** 
6. வானவர் ஜிப்ரீலாரும் 
    வாகனம் புறாக்கினோடே 
வானத்திற்கழைத்துச்செல்ல 
    வந்தனர் செய்தியோடு 
            **** 
7. புதையல் நீராம் ஸஸம்மில் 
    புனிதராம் முஹம்மதுவின் 
இதயம் கழற்றி கழுவியே 
    ஈமானும் இல்முவும் புகுத்தினாரே 
                **** 
8. புறாக்கினிலேறி முகத்தஸிற்கு 
    போகும் வழியில் மூஸா-தன் 
கபுறடியில் தொழுதமை கண்டு 
    களித்தே தொடர்ந்தனர் பயணத்தை 
            **** 
9. சுலைமான் தந்த புனித இல்லம் 
    சூழவும் கண்டார் நபிகள் பலரும் 
தலைமை இமாமும் அவரேயானார் 
    தொழுகை நடாத்தி சிறந்தனரே 
            **** 
10. ஆதம் நபியாம் முதலாம் வானில் 
    ஈஸா யஹ்யா இரண்டாம் வானில் 
அழகிய யூசுப் மூன்றாம் வானில் 
    இத்ரீஸ் அலைஹியும் நான்காம் வானில் 
                ****
11. ஐந்தாம் வானில் ஹாறூனும் 
    ஆறாவதாக மூஸா நபியும் 
ஏழாம் வானில் நபி இபுறாஹீமும் 
    அண்ணாலாருக்கு முகமன் கூற 
            **** 
12. ஸலாங்கள் கூறி வரவேற்று 
    சங்கை நபிகள் வானங்களேழில் 
அலைஹிஸ்ஸலாம்கள் அனைவருமே
   அண்ணல் நபியை ஏற்றனரே
             ****
13. தங்க வண்ண பூச்சிகளும் 
    தரத்தில் உயர்ந்த பழரகங்கள்
எங்கும் நிறைந்த முந்தஹாவாம்
  ஏழாம் வானில் நின்றதுவே 
                ****
14. நாளும் எழுபதினாயிரமாம்
  நுழையும் மலக்குகளனைவருமே
மீளனுழையா அதிசயமாம் 
   மஃமூர் பள்ளி சென்றனரே
                 ****
15. மாந்தரேங்கும் சொர்க்கத்து வாசல் 
    மண்ணின் வாசனை கஸ்தூரியாமாம் 
ஏந்தல் நபிகள் நுகர்ந்துணர்ந்தே 
    எமக்குமறிய தந்தனரே 
            **** 
16. இறையை நெருங்க தொழும் வழியாம் 
    இறைஞ்சும் உம்மத் நமக்காக 
மறையை தந்த பேரரசன் 
    மன்றம் சென்று பெற்றனரே 
            **** 
17. ஐம்பது அதிகம் உம் உம்மத் 
    ஐயம் சொன்னார் மூஸாவும் 
ஐந்தே போதும் என்று மனம் 
    அன்னார் திருப்தி கொண்டனரே 
                **** 
18. சான்றுகளெதெற்கு நம்பிவிட 
    சத்தியதூதரின் வார்த்தைகளெமற்கு 
தோன்றிய வர்த்தக கூடமொன்று 
    தோதான சான்றாயிருந்ததுவே 
            **** 
19. தூற்றிய தீயோர் முன்னாலே 
    துளியேயளவும் ஐயமில்லை 
ஏற்றனர் தோழர் அபூபக்கர் 
    ஏந்தினார் 'சித்தீக்' கிரீடமல்லோ 
                **** 
20. நபியிபுறாஹீமின் மையங்கள் 
    இரண்டாம் முகத்தஸ், கஃபாவும் 
நபி முஹமதுவிற்குரித்தே குறித்து 
    நற்செய்தி சொன்னது "மிஃராஜே"