Translate

Pages

Thursday, January 9, 2020

சிறுத்த எறும்பின் சுறுசுறுப்பு

எறும்புக்கூட்டம் தன் பாட்டுக்கு தத்தமது வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன. கூடுகட்டும் கூட்டம், உணவு தேடுவோர், தகவல் வழங்குவோர், உணவு சேகரிப்போர், இராணிக்கு ஊழியம்/பாதுகாப்பு வழங்குவோர்  என இன்னோரன வேலைகளை அவரவர் தன்பாட்டுக்கு நிறைவேற்றிக்கொண்டிருந்தனர்.

ஆங்காங்கே சிற்சில குறைபாடுகள் அவதானிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட வேலைகளுக்கு மேற்பார்வையாளர்களை நியமிக்க பரிந்தரைக்கப்படுகிறது.

இப்போது முன்பைவிட முன்னேற்றம் தெரிகிறது.

மேற்பார்வையாளரின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். தொடர்ந்து கீழ்நிலை, நடுநிலை உயர்நிலை முகாமையாளர்கள் உருவாகினர். பிரதி பொது முகாமை, மேலதிக பொ. மு, உடன் பொது முகாமையாளரும் நியமனம் பெறுகிறார். இவர்களையெல்லாம் சிறப்பாக கையாள வேண்டி எறும்பு வள முகாமைத்துவ பிரிவும் உருவாகியது. அதற்கும் மே. பொ.மு விலிருந்து அலுவலக உதவியார் வரை அனைவரும் நியமிக்கப்படுகின்றனர்.

அத்தோடு எறும்பு வள அபிவிருத்தி மற்றும் பயிற்சிப்பிரிவு அனைத்து எறும்பு வளங்களுடனும் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு பிரிவும் தத்தமது ஊழியரின் பதவி உயர்வினை கருத்திற் கொண்டு புதிது புதிதாக பதவிநிலைகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தன.

அரசியலும் தனது பங்கிற்கு நிறுவனத்தலைவர், பிரதித்தலைவர், வேலைப்பணிப்பாளர் உட்பட்ட பணிப்பாளர் சபையை தேவயானளவு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் ஏற்படுத்திக்கொண்டது.

அத்தோடு, அந்த அரசியல் அவைக்கு வேலைகளை கண்காணித்து அறிக்கைகள் பெற்றுக்கொள்ள உள்ளக கணக்காய்வுப்பிரிவும் இணைத்துக்கொள்ளப்படுகிறது.
அதுவும் தமக்கென பதவிநிலைகளை ஏற்படுத்திக்கொள்கின்றது.

அரசியலின் தலையீட்டின் விளைவாக, தொழிற் சங்கங்கள் தோற்றம் பெற்றன.

அதுவரையிலும் காலநேரம், இலாபநஷ்டம் பாராது சுறுசுறுப்புடன் ஊழிய மற்றும் அலுவலக எறும்புகள் கையெழுத்து போடுவதோடு தமது கடைமைகளை மட்டிறுத்திக்கொண்டன. வேலை செய்ய மேலதிக நேரக்கொடுப்பனவுகள் கோரப்பட்டன. பின்னர், அவையும் கூட உரிமை ஆகின.

அனத்து எறும்பு வளங்கள் இருந்தும் சேவைகள்/வேலைகளுக்காக கொந்துராத்துகள் வழங்கப்பட்டன. அரசியலும் அதிகாரியும் அதனை மேலதிக வருமானமானத்திற்கான வழியாக்க, ஈற்றில் அதுவே அவர்களின் பிரதான வருமான வழியுமாகியும் போனது.

எறும்புகளோ அலுவலகத்தில் அரசியல் உரசலில் பிசியாகிப்போனன.