Translate

Pages

Monday, November 12, 2018

மழை நீர் சேகரிப்பு





சில நிமிடங்களுக்கு பெய்யும் மழையினால் கூட வெள்ளம் தோன்றுகின்ற நிலையில், சில நாள் வெயில் கூட வரட்சிக்கு இட்டுச்செல்வதினை அவதானிக்க முடிகிறது. பூமி தாகத்தினால் தவிக்கின்ற அதே வேளை பொழிகின்ற மழை நீரோ வேண்டத்தகாததாக கருதப்பட்டு இயன்ற அளவு விரைவாக வழிந்தோடச்செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை வேடிக்கையானது.

முன்பெல்லாம் பூமியை நோக்கி வீழ்ந்த மழைத்துளி, சூழ்ந்திருந்த மரங்களாலும் புற்களாலும்  வேகம் குறைக்கப்பட்டு பூமியை மெதுவாக தொடச்செய்யப்படும் போது, அது பூமியை ஊடறுத்து உட்புக போதிய அவகாசம் இருந்தது. பெய்த மழையின் குறிப்பிடத்தக்க அளவானது நிலத்தடியில் சேமிக்கப்பட, நீண்ட வெயிலைக்கூட சமாளித்து கொள்ளும் சக்தியினை பூமி பெற்றிருந்தது.

மரங்களினதும், புற்றரைகளினதும் இடங்களை கட்டடங்களும் சீமந்து தரைகளும் ஆக்கிரமித்துக்கொள்ள, வானத்திலிருந்து வேகமாக வீழும் மழைத்துளி எவ்வித தடங்கல்களுமின்றி தரையை தாக்கி தெரிகின்ற பள்ளத்தினை நோக்கி விரைவதன் விளைவு, சிறு மழைக்கும் வெள்ளம், குறுகிய வெயிலிற்கும் வரட்சி.

இயற்கை அமைத்துத்தந்த சமநிலையை குழப்பி விட்டு, கையைக்குழைந்து நிற்கிறது மானுடம். இனி என்ன செய்வது? நினைத்த மாத்திரத்தில் மழையை வா! என்றவுடன் வருவதற்கும், போ! என்றவுடன் போய்விடுவதற்கும் மழை என்ன எமது செல்லப்பிராணியா? அல்லது,   கட்டிய கட்டடங்களை உடைத்து மழை நீருக்கு பூமியை ஊடறுக்க வழி சமைத்துக்கொடுப்பதா? நிலைமைக்கேற்றவாறு எம்மை மாற்றிக்கொள்ளாத வரையில் பிரச்சினை பிரச்சினைதான்.



இந்த சந்தர்ப்பத்தில் இயற்கை எமக்கொரு பாடம் சொல்லித்தருகிறது, மழை பொழியும் போது சேமித்து வைத்து, இல்லாத போது பாவித்துக்கொள்வது பற்றி. வெள்ளமாக வந்து அச்சுறுத்தும்  மழை நீரை உரிய முறையில் சேமித்து, வரட்சியின் தாகத்திற்கு தீனியாக்க வேண்டியதுதான். மழையாலும் மழையின்மையாலும் நாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு தீர்வாக இது அமையும். நிலைமையின் விபரீதத்தினை புரிந்து கொண்டு செயல்படத்தவறும் பட்சத்தில் நிலைமை மென்மேலும் சிக்கலடையலாம். எதிர்காலச்சந்ததிகளுக்காகவே உருகி உருகி உழைத்து சொத்து சேர்க்கும் நாம், அச்சந்ததிக்கான வாழும் சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதினையும் உணர வேண்டும்.

மழை நீர் சேமித்தல் எனும் போது இரண்டு அடிப்படைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.

1. நிலத்தின் மேல் வழிந்தோடி பிரச்சினையாக உருவெடுக்கும் நீரை நிலத்தினுள் புகச்செய்து சேமிப்பதன் மூலம், நிலத்தினை வளப்படுத்தொக்கொள்ளல்.

2. பொருத்தமான முறையில் மழை நீரை சேகரித்து வைத்து தேவையான போது பாவித்துக்கொள்ளல்.

பொதுவாக சேகரிப்பை தாண்டி வரும் மேலதிக நீரை  நிலத்தடியினுள் உட்புகச்செய்யும் உக்தி பயனுள்ளதாக அமையும்.

முதலாவது வழியினடிப்படையில், இடத்திற்கேற்றவாறு முறைகள் தெரிவு செய்யப்படலாம். உதாரணத்திற்கு சில முறைகளை சுட்டிக்கட்டலாம்.

அ) சிறியளவிலான குட்டைகளை ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேங்கச்செய்யப்பட்டு  நிலத்தினுள் உட்புக வழி சமைக்கப்படலாம்.  மேலும் குட்டையிலிரிந்து நேரடியாகவும் தேவைக்கேற்றவாறு பெறப்படலாம். இது நகரச்சூழலுக்கு சில வேளை பொருத்தமற்றதாக அமையலாம்.



ஆ) மீழ் நிரப்பு குழிகள்/ துளைகள் ஏற்படுத்தப்படுதல். பொருத்தமான இடங்களில் குழிகளை ஏற்படுத்தி மேலதிகமாக வழிந்தோடும் மழை நீரை அவற்றை நோக்கி திருப்பி விடுவதன் மூலம் நிலத்தடி நீரை வளப்படுத்திகொள்ள முடியும்.



இ) கிணறுகள் போன்ற ஏற்கனவே இருக்கும் குழிகளை நோக்கி மழை நீரை திருப்பிவிடுதல்.  உதாரணமாக, கூரை நீரை கிணறுகளை நோக்கி திருப்பி விடுதல் மிக இலகுவான முறையாகும். இது கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் ஒரு முறையாகும். இவ்வாறு செய்யப்படும் பிரதேசங்களிலுள்ள கிணறுகள் வரட்சிக்காலங்களில் தாக்குப்பிடிப்பது கண்டறியப்பட்டுள்ளது.



ஈ) சிறியளவிலான அணைகளை ஏற்படுத்தி  வழிந்தோடும் நீரின் வேகத்தினை கட்டுப்படுத்துவதன் மூலம் நிலத்தினுள் உட்புகுவதற்கிரிய அவகாசத்தினை ஏற்படுத்திக்கொடுத்தல்.



இது போன்ற இன்னோரன்ன முறைகளை குறிப்பிடலாம்.  இடத்திற்கும் காலநிலைகும் ஏற்றாற் போல பொருத்தமான முறைகளைக்கண்டறிந்து நிலத்தின் தாகத்தினை தீர்த்துக்கொள்ளலாம்.

இரண்டாவது அடிப்படையின் படி, மழை பெய்கின்றபோது சேமித்து பின்னர் பாவனைக்குட்படுத்துதல். நகர்ப்புறங்களில் வீழும் கூரை நீரின் அளவானது, அந்நகரங்களின் வருடாந்த நீர்த்தேவையினை விடவும் அதிகமானது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை வேறுவடிவில் சொல்வோமானால் நகர்ப்புறங்களில் கூரை நீரை உரியமுறையில் சேமித்து பாவனைக்குட்படுத்துவோமானால், அங்கு நீர் வழங்கள் திட்டங்களின் தேவை இருக்காது. இதன் மூலம் பெருமளவிலான சக்தியும் பமமும் சேமிக்கக்கூடியதாக இருக்கும் என்பதோடு, நகர்ப்புறங்களில் சிறுமழைக்கும் ஏற்படும் சிறு வெள்ளங்களுக்கும் தீர்வாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த இடத்தில் நம் கண் முன்னே தோன்றும் முதற் கேள்வி, இந்த நீரானது குடிப்பதற்கு உகந்ததா என்பதே. உண்மையில் சொல்லப்போனால், மழை நீரானது உரிய முறையில் சேமிக்கப்படுமானால், இதைனை விட குடிப்பதற்கு உகந்த நீர் இல்லை என்றே சொல்லலாம். அதே போன்று சலவைக்கும் மிக உகந்த நீராக மழை நீரே காணப்படுகின்றது. இது பற்றி பின்னர் மழை நீர் சேமிப்பின் பயன்கள் என்ற தலைபில் பார்க்கலாம்.



சூழ் நிலைகேற்றவாறு பல்வேறு வழிகளில் மழை நீரை சேமித்துக்கொள்ளலாம். இடவசதியுள்ள வீடுகளில் கூரையின் அளவு மழை வீழ்ச்சியின் அளவு மற்றும் பரம்பல் போன்றவற்றின் அடிப்படையில் உரிய அளவிலான தாங்கிளை அமைத்துக்கொள்ளலாம். உரிய பொறிமுறைகள் மூலம் கூரைகளின் தங்கியிருக்கும் அசுத்தங்கள் கழுவிச்செல்ல விட்டு நீரை சேமித்துகொள்ளலாம்.

நகர அபிவிருத்தி சட்டத்திற்கமைய கட்டடங்கள் அமைக்கப்படும் போது மழை நீர் சேமிக்கும் பொறிமுறையொன்றை அமைத்துக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டமானது சரியாக அமுல் படுத்தப்படுமானால் கொழும்பு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மழையின் போதும், மழையின்மையாலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு குறிப்பிட்டளவு தீர்வு கிடைக்கும். (2009.04.17 இல. 1597/8 வர்த்தமானியைப்பார்க்க.)

http://negombolawsociety.com/1597_8%20(E).pdf


முன்பு சுட்டிக்காட்டியதைப்போல மழை நீரானது மற்றய நீருடன் ஒப்பிடும் போது பல் வகையான அனு கூலங்களை கொண்டுள்ளது;

1. மென் தன்னையுடையதாக இருப்பதால், துணி துவைக்கும் போது குறைந்த அளவிலான சவர்க்காரமே தேவைப்படுதல். மேலும் பாத்திரங்கள் சுத்தப்படுத்தும் போது அவற்றிற்கு ஏற்படும் தீங்கு குறைவானது. பாத்திரங்களில் நீரினால் ஏற்படும் படிவுகள் இல்லை.

2. சக்தியும் பணமும் சேமிக்கப்படுதல்.

3. நீர்த்தேவைக்காக சுயமான தீர்வு ஆகையால் தங்கியிருக்க வேண்டியதில்லை. குறிப்பாக சிதறி வாழும் கிராமச்சுழலுக்கு மிகவும் உசிதமானது.

4. கன மழையின் போதான மண்ணரிப்பு வெள்ளம் போன்றவற்றின்           பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.

5. சுத்திகரிக்கப்பட்ட நீரில் அடயாளப்படுத்த முடியாத தீங்கிழைக்கக்கூடிய இரசாயனப்பதார்த்தங்கள் காணப்படலாம்.

6. ஏனைய நீர் வகைகளுடன் ஒப்பிடும் போது மழை நிரானது தாவர வளர்ச்சிக்கு மிகவும் உசிதமானதாக காணப்படுகிறது. மழை காலங்களில் தாவரங்கள் அதீத வளர்ச்சியை காட்டுவதினை நாம் அவதானிக்கலாம். மழை இல்லாத காலத்தில் வீட்டுத்தோட்டம் மழை நீரை சுவைக்க செய்து ஆரோக்கிய வளர்ச்சிக்கு வழி சமைக்கலாம்.

7.  கிட்னி பிரச்சினை உள்ள பிரதேசங்களில், சேமிக்கப்படும் மழை நீரில் அளவு வரட்சிக்காலத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய போதுமாகாத விடத்து, கிணறுகளில் கிடைக்கும் கன நீருடன் சேமிக்கப்பட்ட மழை நீரை கலந்து நீரின் கனத்தன்மையை ஐதாக்கி பாவனைக்குட்படுத்த முடியும்.


Refer for more:

https://morningchores.com/rainwater-harvesting/