Translate

Pages

Thursday, June 7, 2018

சாது மிரண்டால்................??

 நினைவில் நிலைத்த தருணம்!




வித்ரு தொடங்கிவிட்டது என்பதை ஹவ்ழில் வரும் பேரிரச்சலில் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் எங்கிருந்து எவ்வாறு இந்த சில மணித்துணிகளுக்குள் வந்தார்கள் என சிந்தித்து அறிவது கடினமானது. அந்த இளசுகளின் டைமிங்கும் (Timing) ஐமிங்கும் (Aiming)  அவ்வளவு துல்லியமாகவிருக்கும். பள்ளியின் பண்புகள் தெரியாதவர்களின் நோன்புகால பிரசன்னத்தினால் ஹவ்ழில் கழுவப்படும் கஞ்சிக்கோப்பைகளின் மூலம் ஹவ்ழு வாழ் மீன்களுக்கு, நோன்புகாலத்தில் அளவிற்கு மிஞ்சிய உணவு கிடைத்திருந்தாலும், வித்ரு தொடங்கும் அந்தக்கணம் என்னவோ மரண பயத்தினை கொடுத்திருக்க வேண்டும். சலாரென தொடங்கும் அந்த சலசலப்பு குறுகிய காலமாயினும் ஒரு பேரிரைச்சல். பெரும்பாண்மையானவர்கள் ஒழூச்செய்வதிற்குப்பதிலாக அவசரத்தில் முகத்தையும் காலையும் கழுவிக்கொண்டு சஃபிலே சேர்ந்து கொள்வர். அதுவரைக்கும்  இரண்டு மூன்றாக இருந்த சஃபு, சில வினாடிகளுக்குள் பள்ளியின் முக்கால்வாசியை பிடித்திருக்கும்.

இருந்தாலும், இந்த வகைக்குள் அகப்படாத ஒருசில இளசுகளும் இருக்கத்தான் செய்தார்கள். ரம்ஸீன், முஜீப் உட்பட நானும் அந்த விதிவிலக்குகளில் அடங்கும். பெரியவர்கள் மத்தியில் எங்கள் குறித்து ஒரு வகை நல்லெண்ணம் இருந்தது. நாமும் அதைக்காப்பாற்றும் வகையில் மிகவும் கவனமாக நடந்து கொண்டோம்.

நாரிசா பகிரும் வேளை காட்சியின் உச்சக்கட்டம், வித்ரு வேளை விரைந்தோடி வந்தவர்களின் விளைச்சல் கிடைக்கும் வேளை. எப்படியென்றாலும் வயதொத்தவர்களாயிற்றே, நாரிசாவிற்காக வீற்றிருக்கும் வேளை அவர்களை நோக்கி எமது இருப்பிடத்தை நகர்த்த முனையும் போதெல்லாம், எம்மீது நல்லெண்ணம் கொண்ட பெரியவர்களின் அக்கறை எம்மை அந்தக்கூட்டத்திலிருந்து வேறாக்கி பெரியவர்களுடன் இருக்க வலியுறுத்தும். எமக்கான கவனிப்பு பெரியவர்களுக்கொத்ததாகவிருக்கும். நாமும் அந்த கௌரவத்தினை விட்டுக்கொடுக்க விரும்புவதுமில்லை.

என்னதான் இருந்தாலும் விதியின் விளையாட்டு எம்மை சீண்டிக்கொண்டுதான் இருந்தது. நாரிசா பகிர்ந்தளிக்கும் பொறுப்பு தொழில் ரீதியாக மோதினாரையே (மு அத்தின்) சாரும். அவரின் அந்த அதிகாரைத்
தினை அவரின் மகனும் நண்பர்களும் கையிலெடுத்திருந்தனர். அவர்கள் இயன்றளவு நாரிசாவை மீதப்படுத்தி அதனை கையகப்படுத்துவதிலேயே குறியாகவிருந்தனர். விளைவு பெரியவர்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்ற எம்மீதும் அவர்களது கப்பாது செயற்பாடு விழத்தொடங்கியிருந்து. நாம் கட்டிக்காத்த மரியாதைக்கும் வேட்டு வைக்கத்தொடங்கியிருந்தனர். அங்குதான் சாது மிரளத்தொடங்குறான்.....!

இந்த நிலைமை குறித்து எமது உச்ச பீடம் கலந்து ஆலோசித்தது. உச்ச பீடம் என்றால் ரம்ஸீனும் நானும்தான். இதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் எனவும், அது நாம் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும், எனவும் தீர்மானிக்கப்பட்டது.

திட்டம் தயாராகிறது. நாளும் குறிக்கப்படுகிறது. அவர்கள் வரும் பாதை நேரம் என்பன கண்காணிக்கப்படுகிறது. கமலா ஹாஜியாரின் ஒழுங்கை மதிரிசா வீதிக்கு வந்து சேரும் சந்தி தீர்மானிக்கப்படுகிறது. நாரிசா குறித்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் அந்த சலசலப்பிற்கு முன்னமே அவர்கள் வந்துவிடுவதுவும் அவதானிக்கப்பட்டது. இனி நாடக அரங்கேற்றம் தான் பாக்கி.

அந்த நாளின் தராவீஃவை தவிர்த்து குறித்த சந்தியில் இருளினை சாதகமாக்கி நிலையம் எடுத்திருந்தோம். மோதினாரின் மகனும் நண்பர்களிருவரும் அதோ வருகிறார்கள். திட்டத்தின்படி அவர்கள் எங்களைக்கடந்து செல்ல அனுமத்திக்கப்பட்டு இறுதியாக வந்தவர் வாய் பொத்தப்பட்டு கைகளும் கால்களும் இறுக்கப்பிடிக்கப்பட்டு தாக்கப்படுகிறார். நடப்பதை அறியாமல் மற்றய இருவரும் சிறு தூரம் வரை சென்றிருந்தனர். தம்மோடு கதைத்துக்கொண்டு வந்தவரின் சந்த
த்தினை காணாமல் திரும்பிப்பார்த்த போதுதான் அவர்களுக்கு நடப்பதினை ஊகிக்க முடிந்தது. திடீரென சத்தமிடத்தொடங்கினர். "எங்களை கடத்துறாங்கள்.......".  வீதிக்கு சனம் கூடுமுன்னர் நாமும் ஓடி மறைந்து கொண்டோம். 

எங்களுக்கு இருந்த கவலையெல்லாம் எங்களை அடையாளம் கண்டுகொண்டார்களா என்பதே. அவ்வாறிருந்திருந்தால் நாம் சேர்த்து வைத்திருந்த நற்பெயர் நாசமாயிருக்கும். நல்ல வேளை  அது நடக்கவில்லை. நமக்கிருந்த நற்பெயர், எங்களை சந்தேகத்திற்குரியவயவர்கள் பட்டியயிலும் சேர்க்காமல் பாதுகாத்திருந்தது.