Translate

Pages

Saturday, November 9, 2019

தொண்டன் தேம்பல்



கைகூப்பி வணங்கியோனே
கண்டுக்காம போகிறாயே
கதவடிக்கே வந்தவனே
கதவடைத்து விரசிறாயே

கனிவுடன் பேசினாயே
கௌரவனாக்கினோமே
இனிவரா தேர்தலென்றாே
இழிவுடன் விலகிப்போகிறாயே

உறவுகள் இழந்தேனே
உனை ஆதரித்ததனாலே
உதவிக்கு நாடினேனே
உதறினாயே ஆரேயிவனென்றே

உன்னெதிரி எனக்குமென்றேன்
எந்நட்பும் வேண்டாமென்றேன்
ஒன்றானீர் அரசமைக்க
என்னுறவோ இன்றுமில்லை.

தொழக்கூட விழித்ததில்லை
விழித்திருந்தேனுன் வெற்றிக்காக
தொழிலொன்று என்றபோது
தொகையெங்கே என்கிறாயே

நாட்டுக்காகவென்றே நின்றேன்
வீட்டுக்கே செய்யாததை செய்தேன்
நோட்டுக்காய் தின்றே நாட்டை
மீண்டும் வருவாய் வோட்டு கேட்டே

Wednesday, October 2, 2019

நாளும் நாலுவேளையும்

காகம் கரைகிறது
கனவு கலைகிறது
கருமை விலகிறது
காலையாகியது

வெயிலும் எறிகிறது
வியர்த்து வழிகிறது
பற்றி எரிகிறது
பகலும் ஆகியது

வானம் சிவக்கிறது
வனப்பாயிருக்கிறது
மனமும் மகிழ்கிறது
மாலையாகியது

நாளும் நகர்கிறது
நித்திரை அழைக்கிறது
இருளும் சூழ்கிறது
இரவு ஆகியது.




Thursday, September 26, 2019

பாபதேசம்


Image result for crying sri lanka
ஆள வந்த நாயகர்கள்
வீழ விட்டே படுகுழியில்
ஆட்சி செய்து அனுபவித்தார்
மீழா மடுவில் வீழ்ந்து விட்டோம்.

வேற்று மொழி ஆங்கிலமாம்
தூற்றி தள்ளி தூர வைத்தார்
பெற்ற பிள்ளை கள் மட்டும்
கற்று தேற வழி சமைத்தார்.

தீண்டா மொழி தமிழ் என
தள்ளி நின்று பேச வைத்தார்
பண்டாவின் பேரர் கூட
பற்றிக்கொண்டார் தமிழ் மகனை.

சிங்களமாம் சிறந்த மொழி
  ஓங்கி ஒலித்தார் மேடை பேச்சு
இங்கிலாந்து சென்று நன்றாய்
   இங்கிலீசும் கற்று தேர்ந்தார்

ஆனைக்காக அழுகின்ரார் தெரு
  நாய்க்காக தேம்புகின்ரார்
ஆ அது பாவம் என்கின்றார்
  அனைத்துயிரும் ஒன்றே என்றார்

மானுடம் போற்றும் போதி தர்மம்
  மாசு செய்து போதித்தார் கர்மம்
வீணுக்கு வம்புகள் செய்தே
  விதைத்தார் வேற்றுமைகள் பல.

சிங்கமென சீறுகிறார் உரு
  சிறுத்த நாட்டினுள்ளே
அங்கமெல்லாம் மயிர் கூச
  அடங்கினோம் உலக அரங்கில்.

இலவசமாய் எல்லாம் தந்து
  இயங்காமல் செய்து விட்டார்
இல்லாமை சொல்லிக்காட்டும்
  இழி நிலைக்குள் ஆளானோம்.

தேசப்பற்று பேசி பேசி
  தேகம் எல்லாம் உணர்வு ஊட்டி
பாசம் கொண்ட தன் பிள்ளைதம்
   பதிகின்றார் புலம் பெயர்த்து.

வீழ்ந்து கிடந்த வங்கம் கூட
  வீராப்புடன் எழுந்து நிற்க
தாழ்ந்து தவித்து நிற்கிறோம்
  தரணியிலே தரம் கெட்டு.

Wednesday, February 20, 2019

வீணர் சந்தி



எனது ஞாபகத்திற்கு அப்பாற்பட்ட காலத்தில் இருந்து அது ''வீணர் சந்தி''தான். பின்னேரம் தொடங்கி பின்னிரவு வரை இளைஞர் சிலர் சந்தியில் நின்று கொண்டிருப்பது அன்றிலிருந்து இன்று வரை தொடர் கதை. வேலையற்ற இளைஞர் தேவைற்ற விதத்தில் நேரத்ததை வீணடிப்பதாலாே என்னமோ "வீணர் சந்தி" எனற பெயர் நிலைத்துப்போனது.

என்ன தான் வீணர் சந்தி என பெயர் பெற்றாலும் இளைஞர்கள் சந்தியில் கூடுவதினை பெற்றோரும் பெரியோரும் கண்டிப்பதோ கண்டுகொள்வதோ இல்லை. மாறாக அவர்களும் சிலவேளைகளில் அந்த சிறிசுகளுடன் சிறிது நேரம் அளவளாவிச்செல்வதுவும் உண்டு. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அந்த பெரியோரும் ஒரு காலத்தில் வீணர்களாய் சந்தியில் பந்தியமைத்தவர்கள்தாம் என்பதுடன் அந்த இளைஞர்கள் பெற்றோரின் பார்வை வீச்சினுள் வயதிற்கே உண்டான சில சில்மிசங்களுடன் இளைமையை அனுபவிக்கிரார்கள் என்பதுவு ம் ஆகும். மேலும் அந்த இளைஞர்களால் ஏனையவர்களுக்கு குறிப்பாக சந்தியைக்கடக்கும் பெண் பிள்ளைகளுக்கு  பயப்படுமளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதுவுமில்லை. இந்த இடத்தில் சண்டைகளோ சச்சரவுகளே காண்பது அரிது. யாவும் ஹாஷ்யம் எப்போதும் சுவாரசியம்.

என்னதான் வீணர் சந்தி என பெயர் பெற்றிருந்தாலும் இது பிரதேச சிறிசுகளின் மிக முக்கிய மூலஸ்தானமாக அமைந்திருந்து என்றால் அது மிகையாகாது.  வீதி கிரிக்கட்டின் முக்கிய தளமும், தாளவட்டுவான் சந்தியைத்தொடும் பாட்டத்தையுடைய கிட்டிப்புள்ளு விளையாட்டின் குழியடியும் இதுவாகும். பெருநாள் காலங்களில் சலாம் பள்ளியுடன் சேர்ந்த சிறுவர் சந்தையும் இச்சந்தியாகும். பெத்தாட வளவும் ஓதப்பள்ளியும்  பள்ளி வாசலும் இச்சந்தியின் பந்திகளுக்கு ஊக்க காரணிகள்.

NYC மற்றும் Baravor Sports Club என்பன உருப்பெற்றதுவும் இந்த இடத்தில்தான். நற்பிட்டிமுனையின் முதல் கடின பந்த கிரிக்கட்டிற்கும் எண்ண வித்து விதைக்கப்பட்டதுவும் இவ்விடத்தில் தான்.

 குறிப்பிட்டே ஆக வேண்டும், இந்த சந்தியில் பந்தியமைத்தோர் கெட்டு குட்டிச்சுவரானதாகவும் சீரழிந்ததாகவும் சரித்திரம் மிக மிக குறைவு. மாறாக பல டாடக்டர்கள், பொறியியலாளர்கள், நிருவாக சேவை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், கவிஞர்கள் என பல் துறைகளிலும் மிளருகின்ற விற்பன்னர்கள் உருவாகிய இடம். மேலும் பாதுகாப்புத்துறையில் உயிர்த்தியாகிகள் பலரும் இங்கு உருப்பெற்றிருக்கின்றனர் என்பதினையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

இறுதியாக, "வீணர் சந்தி" என்பதற்கு பதிலாக ''Winner சந்தி" என்ற பெயர் பொருத்தமானதாக இருக்கும் என்றிருந்தாலும் நிதை்து விட்ட அந்தப்பெயரே சிறப்பானதாகும்.