Translate

Pages

Tuesday, May 24, 2022

நானும் சாதாரண தரமும்

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுறாமாண்டு இலங்கை வரலாற்றை புரட்டிப்போட்ட வருடம். எண்பத்தியேழாம் ஆண்டு ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி இந்திய சமாதான படை இலங்கை (IPKF ) வந்திருந்தனர். சமாதானத்திற்கான வந்தவர்கள் சன்டையின் போக்கை மாற்றி விடுதலைப்புலிகளை சக்திமிக்கவர்களாக மாற்றி சென்றிருந்தனர். ஜே ஆரின் பிரதமராக இருந்தாலும் IPKF இன் வருகையை மனதார எதிர்த்த பிரேமதாச தான் ஜனாதிபதியானபின் IPKF ஐ வெளியேற்ற முழு மூச்சாக செயற்படடார். அதன் ஓர் அங்கமாக புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கொண்டிருந்தார். அதே வேளை புலிகளை பிளவுபடுத்தி பலவீனம் செய்யும் கைங்கரியமும் அரங்கேற்ற பட்டு கொண்டிருந்தது. மறுபுறத்தில் புலிகளோ IPKF ஐ வெளியேற்றும் தேவையை நிறை வெற்றி கொள்ளும் அதே வேளை தங்களை பலப்படுத்தி அடுத்த நகர்விற்கு தயார்படுத்தி கொள்வதிலும் குறியாக இருந்தனர். இந்த நகர்வுகளுக்கு முத்தாய்ப்பாக 1990.06.11 கல்முனை வெஸ்லியின் இல்ல விளையாட்டு போட்டியின் இரண்டாம் நிகழ்வின் ஓட்டப்போட்டிக்கான 'ஒன் யுவர் மார்க் கெட் செட்' பின்னரான "டப்" சத்தத்திற்கு பதிலாக கல்முனை நகரின் தென் எல்லையில் தொடங்கியது தாக்குதலின் வெடி சத்தம். அதுவே வெஸ்லியுடனான ( Kalmunai Wesley) எனது இறுதி நாளாகவும் அமைந்து போனது. அந்த நாழிகை, இலங்கையின் வரலாற்றையம் புரட்டிப்போட்டிருந்தது. அதன் பின்னர்பல உறவுகளினதும் நட்புகளினதும் இழப்புகள், உடமைகளின் அழிவுகளும் கொள்ளைகளும், நித்திரையிழந்த இரவுகள், உயிருக்கான ஓட்டம் என பல அல்லோல கல்லோலங்களுக்குப்பின் பத்தாம் தர கல்வி அனேகமாக பறிபோன நிலையில் இறுதி தவணையில் கல்முனை ஸாஹிராவில் தஞ்சம் அடைந்திருந்தோம். ஸாஹிராவில் எனது வகுப்பு 10 G (Slr Slr). அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வகுப்பு நவாஸ் (Nawas Mohamed) , மரூசி (Marooz Jamaldeen), அஸ்வத், அஸ்லம் (Aslam S. Moulana) போன்ற பாடசாலையின் பழைய மாணவர் களோடு எம்மைப்போல கல்வியில் அநாதரவாக்கப்பட்ட சிலரும் அந்த வகுப்புக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். தரம் பதினொன்றாகும் போது தரத்தின் அடிப்படையில் 'D' வகுப்பு கலைக்கப்பட்டு நாம் D வகுப்பாக்கப்பட்டிருந்தோம். இந்த அடைவிற்கு பழைய மாணவர்களுடன் புதியவர்களான நாம் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். எது எப்படி இருந்தாலும் பத்தாம் தர இறுதியாண்டு முடிவுகள் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மிக மிகவும் குறைவானதாக இருந்தன. அதன் பின்னர் வந்த டிசம்பர் விடுமுறையில் எமதூரின் அல் அக்ஸா வினால் (Rasmi Jamaludeen)ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் கணித பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றிருந்தேன். இந்த இடத்தில் ஆசிர்களான காசிம் பாவா மற்றும் அஸீஸுல்லாஹ் ஆகியோரின் அர்ப்பணிப்பான கற்பித்தலை நினைவு கூறாமல் இருக்க முடியாது. ஆனாலும் ஏனைய பாடங்களின் தேவை கருதி அந்த வகுப்புகளுக்கு கனத்த மனதுடன் விடை சொல்ல வேண்டியதாயிற்று. பின்னர் ஸாஹிரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்தியேக/ மேலதிக வகுப்புகளில் மட்டுமே தங்கிருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அங்கு ஹமீது (கணிதம்), அலியார் (விஞ்ஞானம்) ஆகியோர் உட்பட்ட ஆசிரியர்களினதும் ஷரீப் ( பகுதி தலைவர்) அவர்களினதும் அரும் சேவை மறக்க முடியாதது, மறக்க கூடாதது. தினமும் நற்பிட்டிமுனை யிலிருந்து சாய்ந்தமருது வரையிலும் இரு தடவைகள் காலையிலும் மாலையிலும் பயங்கரவாத சூழ்நிலையில் பல சோதனை சாவடிகள் கடந்து மிதிவண்டியில் சென்று வருவது என்பது இலகுவானதாக இருக்கவில்லை. கொரணாவினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பரீட்சை எழுதும் மாணவர்கள் குறித்து பேசப்படும் இன்றைய நிலையில், நாம் சந்தித்த சாதாரண தரம் பெயருக்கு ஏற்ப சாதாரணமாக இருக்கவில்லை. அது மிகவும் சிக்லானதும் கடினமானதுமாக இருந்தது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment