Translate

Pages

Wednesday, March 9, 2022

வி(மர்)சனப்பார்வை

 வி(மர்)சனப்பார்வை

-------------------------------------
வானொலி, முன்பெல்லாம் மொழியறிவை வளர்த்துக்கொள்வதற்கு முன்மாதிரியாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அறிவிப்பாளர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்ற பிரம்மை எமக்கு இருந்தது. அந்தளவிற்கு தேடல்களும், முன்னேற்பாடுகளும், தயாரிப்புகளும், அறிவிப்பு பாணியும் அபாரமானதாக இருந்தன.
இப்பொதெல்லாம் நிலைமை தலைகீழாக போயிருப்தை அவதானிக்க முடிகிறது. ஏதோ வேறு தொழில் செய்ய வழியில்லாததால் வந்து சேர்ந்து விட்டோம் என்கிறாற் போல் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தில் அறிவுப்புகள் செய்யப்படுவதாகவே எண்ணத்தோன்றுகிறது. எழுவாய்க்கும் பயனிலைக்கும் சம்பந்தமே இல்லாமலும், ஒருமை பன்மை பேணுதலின்றியும் சப்பை கொட்டிக்கொண்டிருக்கின்றனர். ஏதோ வந்தோம், சொன்னோம், நேரம் கடத்தினோம் என்ற தோரணையில் கடகட வண்டியோட்டம் சகிக்க முடிவதில்லை. எந்தவொரு சம்பந்தமுமில்லாமல் சில சொற்களும் வசனங்களும் அடிக்கடி உச்சரிக்கப்படுவது எரிச்சலுக்கு எண்ணை ஊற்றுகின்றன. மூன்று சொற்களில் முடிகின்ற வசனங்கள் சம்பந்தமேயில்லாத அல்லது பொருத்தமேயில்லாத அடை மொழிகளாலும் இடுமொழிகளாலும் சின்னாபின்னமாக்கி ஜூம்மாக்களில் நேரம் கடத்தும் அதிகப்பிரசங்கிகளை ஞாபகமூட்டி கொண்டிருக்கின்றன.
மகிழ்ச்சிகர செய்தியையும் மரணச்செய்தி தோரணையில் வாசிக்கும் நேத்திராவும் மரணச்செய்தியையும் மகிச்சியாக அறிவிற்கும் தனியார் அலைவரிசைகளும் அறிவிப்பில் உயிரோட்டத்தை தொலைத்து நிற்கின்றன.
மொழியின் ஆற்றலை வளர்க்க எமது கால ஆசிரியர்கள் செய்திகளை கேட்கத்தூண்டிய காலம் போய், பிழைகள் எவ்வாறெல்லாம் விடப்படலாம் என்பதற்கு உதாரணமாக கொள்ள செய்தி அறிக்கைகள் மிகச்சிறந்த சாதனம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர்.
இந்த 'விடயத்தில்' மற்ற எல்லோரையும் தள்ளி விட்டு வசந்தத்தின் சுயாதீன செய்திப்பார்வை முன்னே நிற்கிறது. அதன் அறிவிப்பாளர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இர்பானின் வேகத்தை பிரதியீடு செய்யப்போய் மற்ற எல்லாவற்றையும் தொலைத்து நிற்பது தெளிவாகத்தெரிகிறது. மேலே சுட்டிக்காட்டிய அனைத்திற்கும் உதாரணமாக இந்த நிகழ்ச்சியை கொள்ளலாம்.
எம் இதயங்களில் என்றும் வாழ்கின்ற BH போன்றோர் இன்னும் உயிர் வாழ்கின்ற நிலையில் உயிரோட்டமின்றி உலவும் ஊடகத்துறைக்கு உயிர் கொடுக்கும் காலம் கரைந்து விடவில்லை. திறைமையானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வழி நடாத்தப்படுமானால் மீண்டும் உயிர் பெறலாம் என்பது நம்பிக்கையும் அவாவுமாகும்.

In FB on 23 January 2022

No comments:

Post a Comment