Translate

Pages

Tuesday, December 13, 2022

அந்தவாதமும் பிடிவாதமும்

 ''அந்தவாதம்" சிங்களம் அடிப்படைவாதத்திற்கு வழங்கியிருக்கும் சொல். அடிப்படைவாதத்தின் அடிப்படையை பார்த்தால் சிங்களமே சரியாக பெயர் சூட்டியிருக்கிது. கருத்தில் நியாயம் இருக்கிறது என்பதற்காக யதார்த்தத்தை மறுத்து ஓர் அந்தத்தை பிடித்து தொங்கும் அனைத்தும் அந்தவாதமே.

வாகனத்தில் பயணிக்கும் போக்குவரத்து விதிகளை தெய்வ வாக்காக மதிக்கும் ஒருவன், விதியை மீறி விபத்தை தவிர்க்கும் சந்தர்பத்தில் விதிக்காக விபத்தில் மாட்டினால் அவன் அந்தவாதி. இவ்வாறே எது என்னவானாலும் கட்சிமாறாத தொண்டனும் அந்தவாதியே. கல்லானாலும் கணவன் என உடன்கட்டை ஏற்றும் கலாச்சார வெறியும் அந்தவாதம் தான். அந்தவாதத்திற்கு ஏசி ஏசியே ஆட்சியை பிடித்த கேத்தா கூட்டத்தின் சேதனப்பசளை கொள்கையும் அந்தவாதத்தின் வெளிப்பாடே. நபிகளாரை/ அவரது குடும்பத்தினரை/ இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி எழுதுவதற்காக கொல்ல துணிவதுவும் அந்தவாதமே.
இதே போன்று அரசியல், கலாச்சாரம், போருளாதாரம் என எந்த துறையை பார்த்தாலும் அந்தவாதம் இருக்கவே செய்கிறது.
இந்த வரிசையில் மத அந்தவாதம் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. மதம் சார்ந்த அந்தவாதம் பல சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பவாதமாக மாறி ஒவ்வொரு மதத்தினதும் அடிப்படைகளை தகர்த்தெறிந்து மதங்களை விகாரமடைய செய்திருக்கிறது. சாதாரண மனிதர்களினால் ஆற்ற முடியாத காரியங்களை மத அந்தவாதம் கட்டாயமாக்கி திணிக்கின்றது. அது முடியாத காரியமாகி விடும் நிலையில் அங்கு தான் புரோகிதம் தலையெடுக்கிறது. இறுதியில் புரோகித வேடம் மதங்களை விட்டு மக்களை தூரமாக்கி மதங்களை அனந்தர சொந்தமாக்கி கொண்டது. புரோகிதத்தை விரோதித்த இஸ்லாத்தையும் புரோகிதப்பேய் விட்டபாடில்லை. மௌலானா, ஷேக், பாவா, தங்கல், ஹஜ்ரத் போன்ற பெயர்களில் உலாவும் புரேகித பேர்வழிகள் குறித்து விசேட விளக்கம் தேவையில்லை. ஏனைய மதங்களில் புரோகித தாக்கம் குறித்து இங்கு அளவளாவ விரும்பவில்லை.
அந்தவாதம் என்றாலே மனக்கண் முன் வந்து நிற்பது இஸ்லாம் தான். அந்தளவுக்கு திட்டமிட்ட ஊடக பயங்கரவாதம் செயற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் எந்தவொரு இஸ்லாமிய கோட்பாடுகளும் அந்தங்களில் தொங்கி நிற்பதில்லை. மாறாக எல்லாவற்றிலும் நடைமுறைச் சாத்தியமான நடுநிலை நிலைப்பாட்டையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில் அந்த நடுநிலை நிலைப்பாடுகளில் கூட சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விதிவிலக்குகள் அளித்து தளர்வு போக்கை இஸ்லாம் கொண்டுள்ளது. விபத்தை தவிர்க்க விதிகளை மீற அனுமதி அளிக்கிறது. அதுவே இஸ்லாத்தின் அழகு. எந்தவொரு ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி வலியுறுத்துவதில்லை என்பதே இஸ்லாமிய தத்துவம். ஏனைய மதங்களோடு ஒப்பிடுகையில் இஸ்லாமியர்கள் மதக்கடைமைகளில் பேணுதலுடன் இருக்க முடியுமாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.
அப்படியாயின், இஸ்லாமியர் ஏன் அந்தவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்? அதற்கு விடை காண முன் இந்த குற்றச்சாடினை தெரிவிப்பதில் முன்னிற்பவர்கள் யார், அவர்கள் எதை வலியுறுத்துகின்றனர் என்பதை உற்று நோக்கினால் விடை எளிதாக கிடைத்து விடும். அவர்கள் சரி என காண்பதை ஏனைய அனைவரும் சரி காண வேண்டும் எனவும் அதையே கடைப்பிடிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்/ வற்புறுத்துகின்றனர். நடுநிலையோடு சிந்தித்தால் இதுவே ஒருவகை பயங்கரவாதம். அனேகமான இஸ்லாமியர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. இதனைத்தான் இஸ்லாமிய அடிப்படைவாதமாக சித்தரிக்கப்படுகிறது. அப்படி இது அந்தவாதம் இல்லாவிட்டால் இதனை எவ்வாறு அழைப்பது? பிடிவாதம் என்று அழைக்கலாமா?
அந்தவாதம்/ அடிப்படைவாதம் என்பது சரியான/ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதாவது அந்தத்தில், இலாப நட்டங்களை கவனத்தில் கொள்ளாது, இருந்து கொண்டிருப்பது. மறுபுறத்தில் பிடிவாதம் என்பது அந்தத்தில் மட்டுமல்ல எந்தப் புள்ளியிலும் நிலையாக நின்று கொண்டு சரி பிழை/ சாதக பாதகம் கவனத்தில் கொள்ளாது ஒற்றைக்காலில் நிற்பது. இஸ்லாம் இதையும் மறுக்கிறது. ஆக, எந்த சூழ்நிலைக்கும் ஈடுகொடுக்கும் வகையில் நெகிழ்வு தன்மை கொண்ட பின்பற்றுவதற்கு இலகுவான யாதார்த்தத்தினை அனுசரிக்கும் வகையிலான மனித வாழ்விற்கு ஏதுவான/ நன்மை பயக்கும் விதமான பகுத்தறிவிற்கு உட்பட்ட கோட்பாட்டை நோக்கிய இயல்பாகவே வரும் பிடிப்பு. அதாவது இயல்பான கொள்கை பிடிப்பு.
இது அந்தவாதமும் இல்லை பிடிவாதமும் இல்லை

No comments:

Post a Comment