Translate

Pages

Wednesday, December 14, 2022

தேயாதே செருப்பே





மாஜரின் பூசிய பாண் கொண்ட பிளாஸ்டிக் பெட்டி, சூட்கேஸ், புழுதி படியாத சாப்பாத்து என ஆடம்பரமாக வாகனத்தில் பாடசாலை வந்து இறங்கும் மாணவனைப் பார்த்து இதெல்லாம் எட்டாத்தூரம் என மனதை தேற்றிக்கொள்ளும் அளவிற்கு பக்குவப்பட்டிருந்த எண்பதுகளின் முற்பகுதி.

 டவுனுக்கு போகும் யாராவது ஒருவரின் சைக்கிளில் தொற்றிக்கொள்ளும் அரிய ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர அனேகமாக நடைதான். நடப்பதற்கு, பாடசாலைக்கு, விளையாட்டிற்கு, வைபவங்களுக்கு என விதவிதமாக சப்பாத்துகளும் பாதணிகளும் என மாற்றி மாற்றி அனுபவிக்கும் இந்தக்கால பிள்ளைகள் போலன்றி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒன்றே ஒன்று 'பாட்டா' என அறியப்பட்ட இரப்பர் சிலிப்பர் தான். அதுவும் தேய்ந்தது, அறுந்தது என நினைத்த மாத்திரத்தில் வாங்கி மாற்றி விடவும் முடியாது. வாங்குவதற்கு முன் பல வேண்டுதல்கள் வைக்கப்பட வேண்டியிருந்த காலம் அரச அலுவலகத்தில் பொருட்கொள்வனவு செய்வதாட்டம். 

கிடைத்ததினை வைத்து உச்ச பயனை பெற்றாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்கான பக்குவமும் எம்மிடம் இருந்தது. பாட்டாவின் கீழ்ப்படை வீதியோடும் மேற்படை பாதத்தோடும் போராடி நடுப்படையை பாதுகாப்பதில் மிக மிக கரிசனை காட்ட வேண்டியிருந்தது. நடுப்படை தாண்டி ஒளிப்படை புகுந்தாலும் சலிப்படைந்து விடாது இன்னும் சிலகாலம் பாவித்து விடலாம் என்பதில் உறுதிபட இருப்பது என்பது எமது அடிப்படை கொள்கை. 

தேய்ந்து விடாது காப்பதில் பல வகையான அணுகுமுறைகள் இருந்தன. நடையை குறைப்பதற்கு உண்டான வழிமுறைகள் அதில் ஒன்று. தெரிந்தவரின் பைசிக்கிளில் தொற்றிக்கொள்வது, வாகனங்களின் பின்னால் குறிப்பாக ட்ரெக்டர் பெட்டியின் பின்னால் தொற்றிக்கொள்வது என அடுக்கலாம். நடந்தேயாக வேண்டும் என்ற பல சந்தர்ப்பங்களில் முடிந்தவாறு கையில் தூக்கி ஓடிப்போன சந்தர்ப்பங்களும் உண்டு.

பாட்டாவை பாதுகாக்கும் செயற்பாடுகளின் வரிசையில் மிக முக்கியமான விடயம் கீழ் படைக்கும் வீதிக்கும் இடையிலான தொடுகை தொடர்பை குறைக்கும் வழிகள். முள் உள்ள கனமாக ஒருவகை (புலி நகம்)வித்துக்களை செருப்பின் அடியில் பொருத்திக் கொள்ளும் போது ஓரங்குல உயரமும் டொக் டொக் சப்தமும் ஒருவகை கம்பீர உணர்வை தந்திருக்கும். அத்தோடு எமது அடிப்படை நோக்கம் செருப்பின் அடிப்படையும் தேயாதிருக்கும் என்ற நப்பாசையில் நாம் தேடிய தற்காலிக தீர்வு.

இந்த வரிசையில் ஓரளவு நீண்ட கால நிச்சய தீர்வொன்றும் இருந்தது. வெயிலுக்கு உருகிய வீதியின் தார் படை ஒன்றை பாட்டாவின் அடிப்படையில் பூசிக் கொள்வது. அது வீதி மண்ணுடன் கலந்து ஒருவகை உறுதிப்படையாக நின்று தாங்கும்.

அடியின் ஆயுளை கூட்டிக் கொள்ள என்னதான் பிரயத்தனங்கள் செய்தாலும் பாட்டா பட்டி பொறுமை காத்து ஒத்துழைப்பதில்லை. எந்தவொரு முன் எச்சரிக்கையுமின்றி வாரறுந்து இடைவழியில் கழுத்தறுப்புகள் செய்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அதற்காக வீசிவிட்டு வருமளவு நம் பொருளாதாரம் இடம் தருவதில்லை. அடுத்து, கையில் தூக்கியபடி கங்காரு நடைதான். அது எமக்கு ஒன்றும் புதிதோ முடியாததோ இல்லை. இறுதியில், வாரறுந்த பாட்டா செருப்பு திருத்துனரின் வயிற்றுப் பசிக்கு சோளப்பொரியாக வந்து நிற்கும். எமது இயலாமை அவனது இயலாமைக்கு ஊன்று கோலாக வந்து நிற்பது இறை நியதி. 

என்னதான் பிரயத்தனங்கள் செய்தாலும், கால் விரல்கள் முன்னே அடையாளம் சொருக குதிகாலும் வீதியும் சேர்ந்து செய்யும் விதியின் சதி நடுப்படையையும் துவம்சம் செய்து அவையிரண்டும் முத்தம் செய்ய தொடங்கியிருக்கும் தகவல் மூளைக்கு வலி என்ற வடிவில் போக தொடங்கியிருக்கும்.  அந்த நிலை தாண்டியும் அந்த பாட்டாவுடனான உறவு இலகுவில் முடிந்து விடுவதில்லை. ஒரு கட்டத்தில் அதை நண்பர்களிடம் காட்டி வெற்றிக்களிப்புடன் பெருமைப்படுவதும் உண்டு. அதிலும் ஒரு கிளுகிளுப்பு உள்ளூரும்.

அப்போதும் கூட அந்த பாட்டாவை இலகுவாக வீசி விடுவதாக இல்லை. சில சந்தர்ப்பங்களில் அழி ரப்பராக பாவிக்க முனைந்ததும் உண்டு. கடைசியாக வட்ட வடிவில் வெட்டி விளையாட்டு பொருட்களின் சக்கரமாக மாற்றி விட்டிருப்போம்.

No comments:

Post a Comment